சர்ச்சையான இசைவாணி பாடல்..
ஐயப்ப சுவாமி குறித்து ஏற்கத்தகாத வகையில் பாடல் பாடியதாக கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக் குழுவைச் சேர்ந்த பாடகி இசைவாணி மீது பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்குகளில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைக்கப்பட்டுள்ளார்.
2018ம் ஆண்டு மெட்ராஸ் மேடை என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐயம் சாரி ஐயப்பா' பாடல் சில நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இயக்குநர் மோகன் ஜி இசைவாணியை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார். சபரி மலைக்கு பக்தர்கள் மாலையும் கார்த்திகை மாதம் நெருங்கிவரும் நேரத்தில் இந்த பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலம் பண்பாட்டு மையம் அதரவு அறிக்கை:
பாடகி இசைவாணிக்கு எதிரான கருத்துகள் பெருகிய நேரத்தில் நீலம் பண்பாட்டு மையம் இசைவாணிக்கு ஆதரவாக 'அடிப்படை உரிமையைக் காப்போம், இசைக்கலைஞர் இசைவாணியுடன் துணை நிற்போம்' என்ற அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "2018-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப் பெரிய விவாதமும் நடந்தது. இதே காலகட்டத்தில்... சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக உரிமைகளைக் கோரும் பாடல் வரிகளோடு The Casteless Collective பல்வேறு பாடல்களை உருவாக்கியது.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த உரிமையைக் கோருகிற பாடல்களாகத்தான் அவை இயற்றப்பட்டன. இங்கு பேசப்பட்டுவரும் கோவில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும், பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இந்தப் பாடலைப் பாடியது இசைவாணி. எழுதி இசையமைத்தது The Casteless Collective" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "அடிப்படையில் அது ஐயப்பன் சம்பந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில், கோவில் நுழைவைக் கோரும் வரிகளும் இருந்தன. இந்த முழு உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக இருக்கிறது என சமூகவலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப நினைப்பதன் மூலம் சமூகப் பதற்றத்தை உருவாக்கிவிட முடியுமென நினைக்கிறது ஒரு கூட்டம்" எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கூட்டம், பாடகர் இசைவாணியை ஆபாசமாக சித்தரித்து, தொலைபேசியில் மிரட்டி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியும் வருவதாக நீலம் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையில் புகார் அளித்த இசைவாணி
இசைவாணி 2021ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். பிபிசி-யின் 100 நம்பிக்கை ஏற்படுத்தும் பெண்களில் ஒருவராக 2020-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை மிரட்டுபவர்கள் மற்றும் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
கைது செய்ய வேண்டும் -பாஜக
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஐயப்பனைப் பற்றி மிக மோசமான கருத்துகளைக் கொண்ட பாடலை இசைவாணி பாடியிருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
பாஜகவைச் சேர்ந்த ஹெச் ராஜாவும் இசைவாணிக்கு எதிரான கருத்துகளைப் பேசினார். பா.ரஞ்சித் மற்றும் இசைவாணி கைது செய்யப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது கார்த்திகை மாதம் வரும் நேரத்தில் பா.ரஞ்சித்தும், இசைவாணியும் ஐயப்பன் குறித்து கேலி பேசுவதாக ஹெச்.ராஜா பேசினார்.
"கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்த இந்த அரசாங்கம் இசைவாணியை பிடிக்க ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கேள்வி எழுப்பினார் ஹெச்.ராஜா.
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிக்கை:
இசைவாணிக்கு ஆதரவாக தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குரல் கொடுத்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பழங்குடிகளின் தொல்தெய்வம்தான் பின்னாளில் ஐயப்பனாக மாற்றப்பட்டு இந்துமதக் கடவுளெனத் திரிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஐயப்பனை பல்சமயத்தவரும் நல்லிணக்கத்துடன் வழிபடுகின்றனர். 1960கள் வரை கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு வயதுவரம்பின்றி எல்லாப் பெண்களும் பெற்றிருந்த உரிமை மறுக்கப்பட்ட நிலையிலேயே உரிமைமீட்புக்கான கோரிக்கையும் போராட்டமும் எழுந்தன. அதன் தொடர்ச்சியில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கேரள அரசின் உறுதிப்பாடு, லட்சக்கணக்கான பெண்கள் நடத்திய மனிதச்சுவர் போராட்டம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்றும் அதன் நியாயத்தை வலியுறுத்தியும் தொடங்கும் இப்பாடலில் ஐயப்பனோ வேறெந்த தெய்வமோ அவமதிக்கப்படவில்லை." எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இசைவாணியை மிரட்டும், அவதூருபரப்பும் கும்பல் குறித்த விவரங்களுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை தமுஎகச அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
"இசைவாணி வேறு மதத்தவர் என்கிற பொய்யைச் சொல்லி, அந்த மதத்தைச் சேர்ந்த இவர் இந்துமதக் கடவுளை இழிவுபடுத்திவிட்டார் என்று மதரீதியான மோதலைத் தூண்டும் இழிசெயலிலும் இறங்கியுள்ளனர். இந்தப் பொய்களையே முன்னிறுத்தி இசைவாணி மீதும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களையும் கொடுத்து வருகின்றனர். பெண்களைத் தெய்வமாகப் போற்றுவதாக பீற்றிக்கொண்டே ஒரு பெண் கலைஞரை இவ்வாறு வக்கிரமாக சித்தரித்து அச்சுறுத்தியும் அவதூறு செய்தும் வருகின்றனர் இணையப் பொறுக்கிகள்....
சுகந்திரமான கலைச்செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சுயதணிக்கைக்குள் முடக்கி சங்கபரிவாரத்தின் இழி முயற்சிகளை முறியடித்தாக வேண்டும்....
இசைவாணி எந்த மதத்தவராக இருந்தபோதிலும் வழிபாட்டுரிமை உள்ளிட்டு பாலினச் சமத்துவத்தைக் கோருவதற்கு அரசியல் சாசனப்படியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் அவருக்குள்ள உரிமையினைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது." என்றும் தமுஎகச அறிக்கை குறிப்பிடுகிறது.
அமைச்சர் சேகர்பாபு கருத்து:
இந்த விவகாரத்தில் திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்கமாட்டார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நான் பத்திரிகைகள் மூலமாக அறிந்துகொண்டேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது." எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் கருத்து:
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,"அந்த பாடல் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்ற சர்ச்சை எழுந்தபோது ஒரு பெண்ணியக் குரலாக, பெரியாரின் குரலாக, இசையாக அந்தக் குரல் எழுந்திருக்கிறது. 'அதானி கைது செய்யப்பட வேண்டும்' என்பது இப்போது தேசிய அளவிலான கோரிக்கையாக வளர்ந்திருக்கிறது அதையெல்லாம் திசைதிருப்புவதற்காக இதுபோன்ற பிரச்னைகளை தமிழ்நாட்டில் பெரிதுபடுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமானது அல்ல, கண்டனத்துக்குரியது." என்று பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook