மன்னார்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சசிகலா, தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது, "நான்கு ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கான எந்தவித பணியையும் திமுக இதுவரை செய்யவில்லை, இன்னும் ஓராண்டு தான் ஆட்சி உள்ளது.
`வாட்ஸ் அப் மூலம் விளம்பரம்'
ஒரு வாரமாக பெய்து வரும் மழையில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,000 ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பயிர் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்கள் குறித்த விவரங்கள் சென்று சேர்வதில்லை, எனவே தமிழக அரசு முன் நின்று அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும். இது மக்களுக்கான அரசாங்கமாக செயல்படவில்லை. தமிழக முதல்வர் ஆய்வு என்ற பெயரில் மாவட்ட தோறும் சென்று போட்டோ எடுத்து அதனை வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்து வருகிறார். இந்த மாதிரியான விஷயங்களை தான் இந்த அரசு செய்கிறது.
`பிறந்தநாளை கொண்டாடுவதில் தான்..'
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறும் ஸ்டாலின், விவசாயிகளை இதுவரைஎட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது பெய்த மழையில் ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. பாம்பன் பகுதியில் மக்கள் மிகவும் மோசமான நிலையில் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தனியார் பள்ளியில் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கொண்டாடுவதில் தான் மும்முரமாக இருக்கின்றனர். நான், 39 வருடங்களாக அரசியல் பயணத்தில் இருக்கிறேன். இது போல் எந்த தலைவரும் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதில்லை.
`ஆய்வுக் கூட்டம் நடத்துவதில் பிரயோஜனம் இல்லை'
இதுதான் அரசின் லட்சணம். முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் போது அவரது பயணத்திற்காக அனைத்து அதிகாரிகளும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நிர்வாகம் முடங்கும் நிலை உருவாகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி நிர்வாகம் செய்ததை இந்த அரசு கற்றுக்கொள்ள வேண்டும். ஆய்வுக் கூட்டம் நடத்துவதில் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. வாழை சாகுபடி முதலான அனைத்து விவசாயிகளும் தற்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். முதலில் விவசாயிகளது கஷ்டங்களை துடைக்க வேண்டும்.
`நெல் கொள்முதல் நிலையங்கள் மூடி கிடக்கிறது'
அரிசி ஏற்றி இறக்குவதில் சுமார் ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. இது நம்ப கூடியதாக உள்ளதா? விவசாயிகள் கொடுக்கும் நெல்லை முறையாக வாங்குவது கிடையாது அனைத்து கொள்முதல் நிலையங்களும் மூடி கிடக்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விலையில்லா அரிசி 20 கிலோ கொடுக்கப்பட்டது. தற்போது 8 கிலோ 9 கிலோ என குறைத்துக் கொடுக்கிறார்கள். இதே போன்று தான் இந்த அரசு ஒவ்வொன்றும் செய்து வருகிறது.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். 2026ல் அம்மா ஆட்சி தான் கட்டாயம் வரும். மக்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னார்கள். ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகாலம் ஆகிவிட்டது ஆனால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை. இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்" என்றார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் வேட்டைக்குச் சென்ற சமயத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திடம் (PLA) பிடிபட்ட மிரம் டாரோன் என்ற 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு தன் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்திய - சீன எல்லையில் வேட்டைக்குச் சென்றிருந்தபோது சீன இராணுவத்திடம் பிடிபட்டார். இந்தச் சிறுவன் சீன இராணுவத்தின் பிடியிலிருந்த சமயத்தில் அவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிறுவன் மிரம் டாரோன், ``நான் பிடிபட்டபின் என் கைகளைக் கட்டினார்கள். முகத்தையும் ஒரு துணியால் மூடி விட்டார்கள். என்னுடைய கைகளைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். பின்னர், என்னைச் சீன இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். முதல் நாளில் சித்ரவதை செய்தார்கள். எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் வைத்தார்கள். இரண்டாம் நாளிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு போதுமான தண்ணீரும் உணவும் கிடைத்தது" எனக் கூறியிருக்கிறார்.
ஜனவரி 18-ல் மிரம் பிடிபட்டிருந்தாலும் ஜனவரி 19-ம் தேதி அருணாச்சலப் பிரதேச மக்களவை எம்.பி-யான தபீர் காவ் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்த பின்னர் மிரம் காணாமல் போன விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து, இந்திய இராணுவம் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஜனவரி 27 -ம் தேதி மிரம் விடுவிக்கப்பட்டார். உடல்நிலை சோதனைகள் மற்றும் சில சட்ட நடைமுறைகளால் தற்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்பு தன் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அவருக்கு ஜிடோ(Zido) கிராம மக்கள் பலத்த வரவேற்பளித்தனர்.
தன்னுடைய மகனின் தற்போதைய நிலை குறித்துக் கூறும் மிரமின் தந்தை ஒபாங் தரோன், ``என் மகனை மிகவும் துன்புறுத்தியுள்ளார்கள். அவன் பிடிபட்டதும் அவனிடம் திபெத்தியனில் பேசி இருக்கிறார்கள். அவன் அது புரியாமல் இந்தியிலும், எங்கள் தாய்மொழியான ஆதியிலும்(Adi) பேசி இருக்கிறான். அது அவர்களுக்குப் புரியாததால் அவனை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்கள். அவனை உதைத்திருக்கிறார்கள். நாங்கள் இந்திய இராணுவத்திடம் பேசியிருக்கிறோம். என் மகனின் சிகிச்சைக்கு உதவுவதாகக் கூறியிருக்கிறார்கள்" என்றார்.