மழை மற்றும் மண் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, மாற்றுத்தொழிலைத் தேடி வருகின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
ஈர மண்ணை பிசைந்து, அதற்கு உருவம் கொடுக்கும் கலையில் கைதேர்ந்தவர்கள் மண்பாண்டக் கலைஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு தேவையான கார்த்திகை விளக்குகள், பல வகை மண் பொம்மைகள், பொங்கல் பானைகள், கோயில் விழாக்களுக்கு தேவையான கருப்பசாமி, அய்யனார், மதுரை வீரன் சிலைகள், ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற உருவ பொம்மைகளும் உருவாக்கப்படுகின்றன.
இந்தத் தொழிலை, உடுமலை வட்டம் புக்குளம், வல்லக்குண்டாபுரம், நஞ்சே கவுண்டன்புதூர், குரல்குட்டை, பள்ளபாளையம், கொழுமம், குமரலிங்கம், பாறைப்பட்டி, செஞ்சேரிமலை, மரிகந்தை உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக புக்குளத்தைச் சேர்ந்த கருப்புசாமி, கனகராஜ் கூறியதாவது:
முன்னோர்கள் விட்டுச்சென்ற கைத்தொழிலை செய்து வருகிறோம். களி மண்ணை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு சாமி சிலைகள், மண்பாண்டங்களை உருவாக்கி வருகிறோம். நவீன வசதிகள் காரணமாக, பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இயற்கை ஆர்வலர்கள், கோயில் விழாக் குழுவினர் தரும் ஆதரவால், பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்தத் தொழில், மழையால் ஓராண்டில் 4 மாதங்களும், களி மண் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையாலும் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி மாற்றுத்தொழில் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
காலம் காலமாக இந்தத் தொழிலை செய்துவரும் எங்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லோடு களி மண் இருந்தால்தான் குடும்பத்தை காக்க முடியும்.
மாற்றுத்தொழில் தெரியாது. அதனால் அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். மழைக்காலங்களில் குடும்பத்தை காக்க, உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ராஜா கூறும்போது, '1977-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, இந்த நாட்டின் கலைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். அவரது ஆட்சியில் மண்பாண்டக் கலைஞர்களுக்கு சக்கரம் வழங்கப்பட்டது. எனவே, தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் கூறும்போது, 'விதிமுறைகள்படியே அரசுக்கு சொந்தமான குளங்களில் மண் எடுக்க முடியும். இருப்பினும் மண்பாண்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கருதி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.