தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதி விவசாயிகளிடம் ஆதரவு திரட்டி, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்துப் போராடி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் மேகேதாட்டுவை முற்றுகையிட, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் புறப்பட தயாராகினர். இதில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என 1500-க் கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஓசூரில் நேற்று நடந்த தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர், மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை, என தெரிவித்தார்.
இவரது கருத்து விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் (எஸ்.ஏ.சின்னசாமி ஆதரவாளர்கள்), பாரதி கிஸான் சங்கம், தமிழக விவசாய தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம், விவசாய பாதுகாப்பு சங்கம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 'கர்நாடகாவில் மேகேதாட்டில் அணைக் கட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மறைமுக ஆதரவு?- விவசாயிகள் அதிர்ச்சி' என்ற தலைப்பில் 'தி இந்து' நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் கூட்டம் நடைபெற்ற அரங்கில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அமைதி காக்கும்படி அறிவுறுத்தியும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து ராமகவுண்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டபடி விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விவசாயிகள் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தனர்.