BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 10 December 2014

பிசிசிஐ தேர்தல் ஒத்திவைப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக் குழுத் தேர்தலை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு குறித்த விசாரணை நிலுவையில் இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், ஐபிஎல் விதிமுறைகளை மீறியவர்கள் மீது தண்டனை எடுப்பது குறித்து முடிவு செய்ய, உயர் நிலைக் குழு அமைக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்தக் குழுவுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவில் (பிசிசிஐ) சீனிவாசன் தொடர்ந்து இருக்க வேண்டுமா? அவருக்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாமா? என்பது குறித்து ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படும் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சீனிவாசன் உறுதி: இந்நிலையில், நீதிபதிகள் தாக்குர், இப்ராஹிம் கலிஃபுல்லா அடங்கிய அமர்வு முன்பு இது தொடர்பான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஐ.பி.எல். விவகாரங்களில் தலையிடாமல், விலகியிருக்கப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதேவேளையில், பிசிசிஐ நிர்வாகக் குழுத் தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு அனுமதியளிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. விசாரணையின் போது, சீனிவாசனின் வழக்குரைஞராக ஆஜரான கபில்சிபல் கூறியதாவது. சீனிவாசன் குற்றமற்றவர் என்று உயர் நிலைக் குழு தெரிவிக்கும் வரை, ஐ.பி.எல். விவகாரங்களில் அவர் தலையிடாமல் விலகியிருப்பார்.

மேலும் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அவரை அனுமதிக்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் தேர்தலைத் ஒத்தி வைக்க வேண்டும் என்று வாதாடினார். பிசிசிஐ எதிர்ப்பு: உயர் நிலைக் குழு அமைப்பதற்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவால் கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.ஏ.சுந்தரம் வாதிட்டார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்க வேண்டுமாயின், வாரியத்தின் ஆட்சிக் குழுதான் அதைச் செய்ய வேண்டும் என்றார் அவர். வழக்கு விசாரணையில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, "சோதிக்கப்படாத அறிக்கையை (முத்கல் குழு அறிக்கை) ஆதாரமாக எடுத்துக் கொண்டால், குருநாத் மெய்யப்பன் மீது தவறான அபிப்ராயம் தான் ஏற்படும்' என்றார்

இதற்கு நீதிபதிகள் கூறியதாவது: பிசிசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் குருநாத் மெய்யப்பனை சென்னை அணியின் நிர்வாகி என ஒப்புக் கொண்டனர். அதன்பிறகும், அணிக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றே குருநாத் கூறிவருகிறார். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை முடித்து வைக்க சிறிது காலமாகும். எனவே பிசிசிஐ நிர்வாகக் குழுத் தேர்தலை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்க உத்தரவிடுகிறோம். கிரிக்கெட் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மாற்றாவிட்டால், அந்த விளையாட்டே சீரழிந்துவிடும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies