பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க ஏதுவாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் 33 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:பெண்களுக்கான பிரச்னைகளை விசாரிக்க, அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. மாறாக, அனைத்து காவல்நிலையங்களிலும் 33 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். தற்போது நாட்டில் இயங்கி வரும் பெண்களுக்கான உதவி மையங்கள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களை முழுமையாகத் தடுக்க வேண்டுமானால், ஒரே இடத்திலேயே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் மையங்களாக அவைச் செயல்பட வேண்டும். அதற்கு, இந்த மையங்களில் செவிலியர்கள், மனதத்துவ நிபுணர்கள், சமூகப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும்.
இதன்மூலமே அந்த மையங்களை பெண்களுக்கான ஒரு முழுமையான மையமாக செயல்படுத்த முடியும்.மேலும் அரசு-தனியார் பங்களிப்புடன் பெண்களுக்கென தொழில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதனால் பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்பட இது ஒரு படிநிலையாக இருக்கிறது. இத்திட்டங்களுக்கு எனது அமைச்சரவை நிதியை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.