நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் தலையில் பந்து தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு அவுஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்தது.
இந்த போட்டியின் போது அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான பிலிப் ஹியூக்ஸ் கடுமையாக காயம் அடைந்தார்.
அவர் 63 ஓட்டங்களில் களத்தில் இருந்த போது சீன் அப்போட் என்ற வீரரின் எகிறிய பவுன்சர் பந்து அவரது தலையை பயங்கரமாக தாக்கியது.
இதில் அவரது இடது காதின் பக்கம் பயங்கரமாக அடிபட்டது. இதனால் அவர் சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆட்டம் நிறுத்தப்படுகிறது.
கிளார்க் உடல் தகுதி பெறாவிட்டால் ஹியூக்ஸ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
