கருப்புப் பணம் விவகாரம், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, புதிய சிபிஐ இயக்குநரை நியமிக்கும் விவகாரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் இரு முறை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலை 11 மணிக்கு அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தொடங்கியதும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கருப்புப் பணம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், "விதிகளின்படி கேள்வி நேரத்தை ரத்து செய்ய அனுமதிக்க முடியாது. நோட்டீஸ் கொடுத்தால் அனுமதிக்கிறேன்' என்று சுமித்ரா மகாஜன் கூறினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், "கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு நிறக் குடைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி ஆகியவற்றின் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். ஆனால், இந்த விவகாரத்தை எழுப்ப சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து நிலவிய கூச்சல், குழப்பத்தால் மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மீண்டும் கூடிய போதும் நீடித்த அமளியால், பிற்பகல் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
சிபிஐ புதிய இயக்குநர் மசோதா: பிற்பகலில் அவை கூடிய போது, சிபிஐ புதிய இயக்குநர் தேர்வுக் குழுவில் மக்களவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை உறுப்பினராக இடம் பெற வைக்கும் வகையில், தில்லி போலீஸ் சிறப்பு அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.அதில் "சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவில் அதன் உறுப்பினர்களில் யாரேனும் இல்லாத போதும், குழுவால் தேர்வாகும் சிபிஐ இயக்குநரின் நியமனத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையும் மீறி மசோதாவை ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் : மாநிலங்களவை காலையில் புதிய நடைமுறைப்படி கேள்வி நேரமின்றி அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியது. அப்போது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் தேர்வுக் குழுவின் தலைவரும், பாஜக மூத்த உறுப்பினருமான சந்தன் மித்ரா, தனது குழுவின் அறிக்கை அளிக்கப்படும் தேதியை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல் சந்தன் மித்ரா தன்னிச்சையாக அவைக்குள் கால நீட்டிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவை விதிகளை மேற்கோள்காட்டி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சந்தன் மித்ரா ஆகியோரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜ்வீ ஆகியோரும் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நீண்ட விவாதத்துக்குப் பிறகு தேர்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 12-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஹைதராபாத் விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்த ராஜீவ் காந்தி பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போதும் இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை அலுவல் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மத்திய அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களை அவைக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களைக் காப்பாற்றவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றன' என்று குற்றம்சாட்டினார்.
இன்று விவாதம்?
கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், கருப்புப் பணம் மீட்பு தொடர்பான விவாதம், இரு அவைகளிலும் புதன்கிழமை நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.