பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, மேலும் ரூ. 1 இந்த வார இறுதியில் குறைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விலை நிலவரத்தின்படி, உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை மாற்றியமைக்கவுள்ளன. தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், அதன் எதிரொலியாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்படலாம் என எண்ணெய் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு குறைக்கப்பட்டால், கடந்த மாதம் (அக்டோபர்) டீசல் விலைக் கட்டுப்பாட்டு முறை அகற்றப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மூன்றாவது டீசல் விலைக் குறைப்பாக இது இருக்கும். அதேபோல், பெட்ரோலைப் பொருத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இது 7-ஆவது விலைக் குறைப்பாக இருக்கும். இதற்கு முன்னர், கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.41-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25-ம் குறைக்கப்பட்டன.