சென்னை: இளைய தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதி விஜய்க்கு அரசியலுக்கு வர ஆர்வம் உள்ளது என்று செய்திகள்
வெளியாகின. அரசியலை மனதில் வைத்து தான் அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள்
இயக்கமாக மாற்றியதாகக் கூட கூறப்பட்டது.
ஆனால் அதன் பிறகு என்ன ஆனதோ
தெரியவில்லை அவர் அரசியல் ஆர்வத்தை பெட்டிக்குள் போட்டு பூட்டி பரண் மேல்
போட்டுவிட்டார்.
ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து
சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து வெளியிடுவார்கள். இந்நிலையில் இது
குறித்து திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான்
கூறுகையில்,
தமிழக மக்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் விஜய்.
தமிழர்களுக்கு ஒரு
பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார்.
அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.
இலங்கை அரசின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை
வெளியிட்டதை கண்டித்து கடந்த திங்கட்கிழமை தமிழ் திரையுலகினர் நடத்திய
கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய
தமிழக முதல்வர் அம்மா அவர்கள், எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கிட்டு
இருக்காங்க.
இலங்கை அரசு அவர்களுடைய பாதுகாப்புத் துறை வெப்சைட்டில்
கொச்சைப்படுத்துவது போன்று ஒரு கமெண்ட் போட்டிருப்பது உண்மையிலேயே என் தாயை
தப்பாக பேசின மாதிரிதான் நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.